Social Icons

Friday 29 August 2014

இந்தியாவில் இஸ்லாம் ,தொடர்-2

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.
எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என
அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.
ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த “சுன்னத்” முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக ‘கேரளா மகா சரித்திரம்’ என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி ‘கோபால குறுபு’ குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் – கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.
இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது ‘கேரள வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.
“சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. ‘கொற்றவை’ என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்” (ஏ. சீதரமேனோன் – கேரள வரலாறு, பக்கம் 82)
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.
ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘புலயனார்’ கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.
ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.
ருமதங்களின் அழிவு…!
கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட
மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.
கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் வைணவமும் இணைந்து சமண புத்த மதங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். அக்கோயிலில் இருந்த ‘பத்மாவதி’ சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்துக்கள் வசப்படுத்தி விட்டனர்.
உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். (மாத்ருபூமி வார இதழ் வாசகர் பகுதி 1989 ஜூலை 2-8) அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது ‘சிதறால் அம்மா’ என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள ‘நாகர் அம்மன்’ கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. அக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் குணவரே பண்டிதர் என்றும் கமல வாகன பண்டிதர் என்று இரு சமண அறிஞர்கள் இருந்து வந்தனர். இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதும் துளு நாட்டைச் சார்ந்த போற்றிமார் (பிராமணர்கள்) அங்கு பூஜாரிகளாக பொறுப்பேற்றனர். (கேரளவரலாறு: ஏ.ஸ்ரீதரமேனோன் பக்கம் 87)
வயநாடு காட்டிற்குள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்ஙேரத் தேவரையும் செல்வரத் தேவியையும் பிரதிஷ்டை செய்துள்ள கோயில், இந்துக் கோயில் மாற்றம் செய்த சமணக் கோயிலாக என்று தெரிய வந்துள்ளது (மாத்ருபூமி வார இதழ். டாக்டர் நெடுவட்டம் கோபால கிருஷ்ணன் 1989).
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் சமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புத்த மதம், சங்க காலத்தில் அதன் முழு வளர்ச்சியை அடைந்திருந்தது. ‘மணிமேகலை’ புத்த மத நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாகோதை என்றும் மகோரயபுரம் என்று அறியப்படும் கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சேர நாட்டு அரசரான பள்ளிபாணப் பெருமாளும் புத்த மதத்தை சார்ந்தவரேயாகும் (இவர் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்).
சபரி மலை ஐய்யப்பனும் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு அரசர் என்று தெரிய வருகிறது. பிற்காலத்தில் இவர் இந்து தேவனாக்கப்பட்டார்.
“சாஸ்தா, அல்லது ஐய்யப்பன் இந்து தேவனாக்கப்பட்ட புத்தன் என்றும், சபரி மலையில் உள்ள சாஸ்தாக் கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரையில் புத்தமத சடங்குகள்தான் பெருவாரியாக காணப்படுகிறது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்” என்று திரு.ஸ்ரீதரமேனோன் குறிப்பிடுகிறார் (பக்கம் 89). ‘சரணம் ஐய்யப்பா’ என்று கூப்பிடுவது புத்த மதக் கொள்கையான ‘சரணத்றணயத்தை’ நினைவு கூறுவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை வேறு பல வரலாற்று பண்டிதர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். திருச்சூரிலுள்ள வடக்குந்நாதர் கோயிலும் ‘கொடுங்கல்லூர் பரணிபாடும்’ புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதிக் கோயிலும் புத்த பள்ளிகளாக இருந்து பிறகு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டவைகளில் குறிப்பிடத்தக்க சிலவாகும். தமிழ் நாட்டிலும் பல புத்த பள்ளிகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன.

ஆரியர்களுடைய வருகை
புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள்
கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.
முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.
அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி ‘அரசரின்’ அடுத்தபடியான ‘வணிகர்’ பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக ‘பிராமணர்’, பிராமணருக்குப் பின் ‘அரசர்’, அரசருக்குப்பின் ‘வணிகர்’ – இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்.
ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.
நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண – புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
“ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்.” (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)
“ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன.” (தென்னிந்தியவரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)
சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.
கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)
முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் ‘கொடும் கொலையூர்’ என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு ‘அல்லூர்’ என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு ‘கொடும் கொலை அல்லூர்’ என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.
இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ‘பரணி பாட்டு’ (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.
“அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது” (டி.எச்.பி. செந்தாரச்சேரி: ‘கேரள சரித்திர தார’ பக்கம் 136)
கிறித்தவர்களும் யூதர்களும் வந்து முதலில் தங்கியது கொடுங்கல்லூரிலாகும். இதைப் போல் ஆரியர்களும் முதலில் வந்து தங்கியதும் இங்குதான். கொச்சி – வியாபார மையமாக மாறுவதற்கு முன் சேர நாட்டின் தலைநகராகவும், வியாபாரக் கேந்திரமாகவும் கொடுங்கல்லூர் விளங்கிவந்தது. மட்டுமின்றி இது ஒரு துறைமுகமும் கூட. அதனால்தான் அராபியர் உட்பட வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கொடுங்கல்லூரை தங்கள் தங்குமிடமாகத் தேர்வு செய்தனர்.
“அவர்கள் (அராபியர்) நகரின் (கொடுங்கல்லூர்) ஒரு பகுதியில் சொந்தமாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலோ எட்டாம் நூற்றாண்டிலோ இஸ்லாம் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தது இந்த அராபிய வியாபாரிகளாக இருக்கலாம். கிறித்துவ மதத்துடன் ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது.”
- தோப்பில் முஹம்மது மீரான்
நன்றி: மக்கள் உரிமை | ஆகஸ்ட் 26 – செப் 01, 2005
                                                                                                                                                               தொடரும்..

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்